முழு ஊரடங்கு எதிரொலி: லாரி பட்டறை தொழிலாளர்கள் 30 ஆயிரம் பேர் வாழ்வாதாரம் பாதிப்பு

முழு ஊரடங்கு காரணமாக நாமக்கல்லில் லாரி பட்டறை தொழிலாளர்கள் 30 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு எதிரொலி: லாரி பட்டறை தொழிலாளர்கள் 30 ஆயிரம் பேர் வாழ்வாதாரம் பாதிப்பு
Published on

நாமக்கல்:

55 ஆயிரம் லாரிகள்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் நெசவு தொழிலுக்கு அடுத்ததாக லாரி தொழில், முட்டைக்கோழி தொழில் பிரதானமாக உள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு லாரி தொழில் இங்கு தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக லாரி பாடி கட்டும் தொழில், பழுது நீக்கும் பட்டறை, பெயிண்டு பட்டறை, முகவர் அலுவலகம் என லாரி சார்ந்த தொழில்களும் படிப்படியாக வளர்ச்சி அடைய தொடங்கின.

பின்னர் லாரி தொழிலில் ஈடுபடுவோருக்கு உதவ லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் தொடங்கப்பட்டன. தற்போது தமிழக அளவில் 4 லட்சம் லாரிகள் உள்ளன. இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 55 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் துறையாக இருப்பதால் பல லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி வாழ்கின்றன. கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு லாரி போக்குவரத்து தொழில் பல்வேறு நெருக்கடியை சந்தித்தது. பின்னர் படிப்படியாக மீண்டு வந்தது. தற்போது கொரோனா 2-வது அலை பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால் மீண்டும் லாரி தொழில் பாதிப்படைய தொடங்கி உள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

நாமக்கல் நகரில் லாரி பாடிகட்டும் பட்டறை, மெக்கானிக் பட்டறை, லேத், பெயிண்டு பட்டறைகள், கண்ணாடி கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், லாரி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், ஆயில் கடைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாகவும், மாத சம்பளத்திற்கும் பணியாற்றி வருகின்றனர்.

முக்கியமாக லாரி பட்டறை தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தினமும் பட்டறைக்கு பணிக்கு வந்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது கொண்டு செல்லும் பணத்தை வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக கடந்த 10-ந் தேதி முதல் நாமக்கல் நகரை சுற்றியுள்ள லாரி தொழிலை சார்ந்த அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இதில் பணியாற்றி வரும் 30 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

நிவாரணத்தொகை

இதுகுறித்து லாரி பாடி கட்டும் பட்டறை உரிமையாளர்கள் கூறியதாவது:-

கொரோனா தொற்று முழு ஊரடங்கால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது லாரி பட்டறைகள் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் தான். இந்த தொழிலில் தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது லாரி பட்டறை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே லாரி பட்டறை மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com