

மும்பை,
மராட்டியத்தில் பொறியியல், பார்மசி, சட்டம் உள்ளிட்ட படிப்புக்களுக்கான பொதுநுழைவு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்கிறது.
பொதுநுழைவு தேர்வு அறிவிப்பு
மராட்டியத்தில் பொறியியல், பார்மசி, சட்டம், எம்.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆண்டு தோறும் பொது நுழைவுத் தேர்வு (எம்.எச்.டி.-சி.இ.டி.) நடத்தப்படுகிறது. இந்தநிலையில் நடப்பாண்டு பொறியியல் (இயற்பியல், வேதியியல், கணிதம்) படிப்புக்கான பொது நுழைவு தேர்வு ஆகஸ்ட் 5 முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.
இதேபோல பார்மசி படிப்புக்களுக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12 முதல் 20-ந் தேதி வரையிலும், ஓட்டல் மேனஜ்மென்ட் படிப்புகளுக்கான தேர்வு ஆகஸ்ட் 21-ந் தேதியும், எம்.சி.ஏ. படிப்புக்கான தேர்வு ஆகஸ்ட் 4, 5-ந் தேதியும், எல்.எல்.பி. (3 ஆண்டு) படிப்புக்கான தேர்வு ஆகஸ்ட் 3, 4 -ந் தேதிகளிலும், 5 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கான தேர்வு ஆகஸ்ட் 2-ந் தேதி நடைபெற உள்ளது.
தாமதம் ஏன்?
இந்த தகவலை மாநில உயர், தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்து உள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வுகள் குறித்து முழு விவரங்களை maahcet.org இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
12-ம் வகுப்பு மாணவர்கள் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மராட்டிய பொது நுழைத்தேர்வு தாமதமாக ஆகஸ்ட் மாதம் நடத்தப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.