

ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு புதிய மஞ்சள் வரத்து தொடங்கி உள்ளது. குவிண்டால் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
புது மஞ்சள்
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால், தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த மஞ்சள் தற்போது அறுவடை செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் புது மஞ்சள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
இந்த நிலையில் நேற்று பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 565 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 809-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 419-க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 559-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 419-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் 426 மஞ்சள் மூட்டைகள் ஏலம் போனது.
ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 2 ஆயிரத்து 626 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 666-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 969-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 99-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 458-க்கும் ஏலம் போனது. 1,603 மஞ்சள் மூட்டைகள் விற்பனை ஆனது.
கூட்டுறவு சங்கம்
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்திற்கு 687 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 899-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 639-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 569-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 599-க்கும் விற்பனையானது. விவசாயிகள் கொண்டு வந்ததில் 335 மூட்டை மஞ்சள் ஏலம் போனது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு 50 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 300-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 400-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 900-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 699-க்கும் ஏலம் போனது. 26 மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது.
விலையில் மாற்றம் இல்லை
இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது, வழக்கமாக மார்க்கெட்டுக்கு புது மஞ்சள் வரத்து தொடங்கினால் பழைய மஞ்சள் விலை சற்று குறையும். ஆனால் இந்த ஆண்டு பழைய மஞ்சள் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. வரும் நாட்களில் அதிக அளவில் புதிய மஞ்சள் வரத்து இருக்கும் பட்சத்தில் பழைய மஞ்சளின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்றனர்.