எண்ணூரில் கைதான மாவோயிஸ்டு பயங்கரவாதி, ஜார்கண்ட் மாநில போலீசாரிடம் ஒப்படைப்பு

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுகர் கஞ்சு (வயது 31). மாவோயிஸ்டு பயங்கரவாதியான இவர் மீது, அந்த மாநிலத்தில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 6 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அவருக்கு ஜார்கண்ட் மாநில கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.
எண்ணூரில் கைதான மாவோயிஸ்டு பயங்கரவாதி, ஜார்கண்ட் மாநில போலீசாரிடம் ஒப்படைப்பு
Published on

அவருடைய மனைவியின் செல்போன் எண்ணை ஜார்கண்ட் மாநில போலீசார் கண்காணித்தனர். அதில் சுகர் கஞ்சு, சென்னை எண்ணூரில் தங்கி, கட்டிட வேலை பார்ப்பது தெரியவந்தது. இதுபற்றி சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எண்ணூர் போலீசார், மாவோயிஸ்டு பயங்கரவாதியான சுகர் கஞ்சுவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர், 2019-ம் ஆண்டு முதல் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுடன் சேர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று இருப்பதும், மாவோயிஸ்டுகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு காடுகளில் வழிகாட்டியாகவும் இருந்தது தெரியவந்தது.

சுகர் கஞ்சு கைதான தகவல் அறிந்ததும் ஜார்கண்ட் மாநில போலீசார் சென்னை வந்தனர். பின்னர் சுகர் கஞ்சுவை திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய எண்ணூர் போலீசார், அவரை ஜார்கண்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பயங்கரவாதியை தங்களுடன் ஜார்கண்ட் மாநிலத்துக்கு அழைத்துச்சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com