

சமயபுரம்,
சமயபுரம் மாரியம்மன் கோவில்
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா உள்ளிட்ட விழாக்கள் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். மேலும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடைபயணமாக வந்து கோவில் வளாகத்தில் இரவில் தங்கி அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றால் நினைத்த காரியங்கள் கை கூடும் என்ற நம்பிக்கை இருப்பதால் அந்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வருடம் ஒரு முறை மட்டுமே வரும் மகாளய அமாவாசை தினத்தன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்வார்கள்.
திருப்பணி வேலைகள்
இத்தகைய சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. சம்பிரதாயப்படி இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகமாகும். அதன்படி, சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆனதை ஒட்டி 2016ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் திருப்பணி வேலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.
அரசு ஒதுக்கிய நிதி மற்றும் நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஏராளமான புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. மேலும் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்த கோவில் வளாகம் நன்கொடையாளரால் கிரயம் பெற்று ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக பெருவள வாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் கோவில் வளாகத்தில் இருந்து சில அடி தூரத்திற்கு அப்பால் திருப்பி விடப்பட்டது. மேலும் கோவிலின் அனைத்து பிரகாரங்களும் சீரமைக்கப்பட்டன.
பாலாலயம்
மேலும் மூலஸ்தானத்தில் திருப்பணி வேலைகள் செய்வதற்கு வசதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மன் படம் மட்டும் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த படத்தையே வழிபட்டு சென்றனர்.
கோவிலின் கிழக்கு பகுதியில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரமும், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் கோபுரங்கள் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதில், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதியில் புதிததாக கோபுரங்கள் கட்டப்பட்டு உள்ளன. 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கட்டப்பட்டு வருகிறது. இது கல்காரம் எனப்படும் கற்களால் கட்டும் பணிமுடிவடைந்த நிலையில் அதன் மேற்பகுதியில் சிற்ப வேலைபாடுகளுடன் கோபுரங்கள் கட்ட வேண்டியிருப்பதால் இந்த பணி முடிவடைய தாமதாகும் நிலை உள்ளது.
6-ந்தேதி கும்பாபிஷேகம்
கோவில் திருப்பணி வேலைதொடர்ந்து நடந்து வருவதாலும், பாலாலயம் நடைபெற்று 6 மாதங்கள் முடிந்து விட்ட தாலும் பக்தர்களின் வழிபாட்டு நலன் கருதி சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டது.
இதனை தொடர்ந்து வருகிற 6-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எனவே கிழக்கு வாசல் ராஜகோபுரம் தவிர மற்ற கோபுரங்களுக்கும் மூலஸ்தான விமானம் மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
யாகசாலை பூஜைகள்
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் மற்றும் இறுதி கட்ட புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சன்னதி பகுதியில் இருந்து சுற்று பிரகாரம் செல்லும் வாசலின் கதவுகள் தேக்குமரத்தால் செய்யப்பட்டு அதை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இதற்காக யாகசாலை பந்தல், யாக குண்டங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 6-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராஜா சிவாச்சாரியார், சந்திரசேகர் சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள், மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளார்கள்.
அடிப்படை வசதிகள்
கும்பாபிஷேகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு வருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின் படி சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
அங்கு 4 கழிவறைகளும், நான்கு நடமாடும் கழிவறைகளும் அமைக்கப்பட உள்ளது. முக்கிய பிரமுகர்களுக்கான வாகனங்களை நிறுத்தும் இடமும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றியும், பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் சுமார் 40 சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.