

பொங்கலூர்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது இந்த விஷயத்தில் இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பொங்கலூரில் நேற்று இளைஞர்கள் காளை மாடுடன் ஒன்றிய அலுவலகம் முன்பு கோவைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். நிகழ்ச்சிக்கு நாகராஜன், தேவராஜன், மோகன்குமார், சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். கொங்கு நாடு மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார்.
அப்போது மத்திய அரசும், மாநில அரசும் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும், நாட்டு மாடு இனத்தை அழியாமல் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த ஆதரவு நிகழ்ச்சியில் தி.மு.க.வை சேர்ந்த அசோக்குமார், வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த விஸ்வநாதன், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாட்ராயன், இந்து முன்னணியை சேர்ந்த சிவசக்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.