கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்க முயற்சி

தஞ்சையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய முயன்ற தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்க முயற்சி
Published on

தஞ்சாவூர்;

தஞ்சையில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய முயன்ற தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெம்டெசிவிர் மருந்து

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்தாக ரெம்டெசிவிர் கருதப்படுகிறது. இந்த மருந்துக்கு வெளிமார்க்கெட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சந்தைகளில் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் விரைந்து சென்று தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் திருவள்ளுவர் நகர் பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கள்ளச்சந்தையில் விற்க முயற்சி

அப்போது அந்த பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள வாஞ்சூரை சேர்ந்த கிஷோர்குமார்(வயது 20), அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மேலமைக்கல்பட்டியை சேர்ந்த கிறிஸ்டோபர்(20), தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த கார்த்திக்(20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

விசாரணையின்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தனர். அதில் ரெம்டெசிவிர் மருந்து 7 பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிஷோர்குமார், தான் ஊழியராக வேலை பார்த்து வரும் தனியார் மருத்துவமனையில் இருந்த அந்த மருந்துகளை எடுத்து வந்து தனது தம்பியின் நண்பர்களுடன் சேர்ந்து கள்ளச்சந்தையில் விற்க முயன்றதும், ஒரு மருந்து பாட்டில் விலை ரூ.1,500 உள்ள நிலையில் அதை வெளிச்சந்தையில் ரூ.23 ஆயிரத்திற்கு விற்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், கைப்பற்றப்பட்ட 7 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோர்குமார், கிறிஸ்டோபர், கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com