கடை மீது கல்வீசி தாக்கியவர்களை கைது செய்யக்கோரி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்

கே.வி.குப்பத்தில் கடை மீது கல்வீசி தாக்கியவர்களை கைது செய்யக்கோரி நேற்று வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடை மீது கல்வீசி தாக்கியவர்களை கைது செய்யக்கோரி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்
Published on

குடியாத்தம்,

கே.வி.குப்பம் மேல்மாயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேலு. இவரது மகன் ராஜரத்தினம் (வயது 28), ஆட்டோ டிரைவர். இவருக்கும் கே.வி.குப்பம் சீதாராம்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கே.வி.குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ராஜரத்தினத்திற்கும், சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜரத்தினம் மற்றும் அவருக்கு ஆதரவாக சிலர் சீனிவாசனை தாக்கி உள்ளனர். அந்த சமயத்தில் அருகே இருந்த கே.வி.குப்பம் வியாபாரிகள் சங்க தலைவர் நந்தகோபால் என்பவரது ஸ்வீட் கடையின் மீது சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் கண்ணாடிகள் மற்றும் பாட்டில்கள் உடைந்து நாசமாயின. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சீனிவாசன் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து நந்தகோபால் கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜரத்தினத்தை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இதேபோல் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைகள் அடைப்பு

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று கே.வி.குப்பத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில், வியாபாரிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், கடையில் கல்வீசி தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கே.வி.குப்பத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், சீனிவாசன் ஆகியோர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கல்வீச்சில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களை கைது செய்ய தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கே.வி.குப்பத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com