

பெங்களூரு
பெங்களூருவில், மெட்ரோ ரெயில் கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
பெங்களூருவில், முதல் கட்ட மெட்ரோ பாதையில் கிழக்குமேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் பாதை பணி தாமதத்தால், வடக்குதெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் நாகச்சந்திரா முதல் எலச்சனஹள்ளி வரை மெட்ரோ ரெயில் இயக்குவது தடைப்பட்டு வந்தது.
இந்த பணிகள் முழுவதுமாக முடிவடைந்ததை தொடர்ந்து நாகச்சந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையிலான மெட்ரோ ரெயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை டிக்கெட் கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, பையப்பனஹள்ளியில் இருந்து நாயண்டஹள்ளிக்கு செல்ல ரூ.40 என இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மெஜஸ்டிக்கில் இருந்து கப்பன்பார்க் செல்வதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.14ல் இருந்து ரூ.15 ஆகவும், மெஜஸ்டிக்கில் இருந்து விஜயநகர் செல்வதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.16ல் இருந்து ரூ.18 ஆகவும், மெஜஸ்டிக்கில் இருந்து அத்திகுப்பே செல்வதற்கான கட்டணம் ரூ.17ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்ந்துள்ளது.
மேலும், மெஜஸ்டிக்கில் இருந்து எலச்சனஹள்ளிக்கு செல்ல ரூ.30 ஆகவும், நாகச்சந்திராவில் இருந்து மெஜஸ்டிக் செல்ல ரூ.38 ஆகவும், நாகச்சந்திராவில் இருந்து எலச்சனஹள்ளிக்கு செல்ல ரூ.60 ஆகவும், பையப்பனஹள்ளியில் இருந்து எலச்சனஹள்ளி செல்ல ரூ.50 ஆகவும், பையப்பனஹள்ளியில் இருந்து நாகச்சந்திராவுக்கு ரூ.58 ஆகவும், நாயண்டஹள்ளியில் இருந்து நாகச்சந்திராவுக்கு ரூ.52 ஆகவும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நாயண்டஹள்ளியில் இருந்து எலச்சனஹள்ளி செல்ல ரூ.45 ஆகவும், பையப்பனஹள்ளியில் இருந்து நாயண்டஹள்ளி செல்ல ரூ.45 ஆகவும் டிக்கெட் கட்டணம் உள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.60 ஆகவும் உள்ளது.