வில்லியனூர் அருகே மினி லாரி மோதி தனியார் பஸ் டிரைவர் சாவு உறவினர்கள் சாலை மறியல்

வில்லியனூர் அருகே மினி லாரி மோதி தனியார் பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
வில்லியனூர் அருகே மினி லாரி மோதி தனியார் பஸ் டிரைவர் சாவு உறவினர்கள் சாலை மறியல்
Published on

வில்லியனூர்,

புதுவை வில்லியனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 44). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று கடலூர் அருகே திருவந்திபுரத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பத்துக்கண்ணுவில் இருந்து வில்லியனூர் நோக்கி சென்றபோது பின்னால் வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது மினிலாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக செத்தார். அந்த லாரி நிற்காமல் சென்று விட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்த உடன் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்துபற்றி தகவல் அறிந்த உடன் சக்திவேலின் உறவினர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய மினிலாரி டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த உடன் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்து ஏற்படுத்திய மினிலாரி டிரைவரை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் பலியான சக்திவேலுக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com