எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைப்பு

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைப்பு
Published on

விழுப்புரம்,

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், இதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி நடைபெறும் என்றும் நேற்று முன்தினம் மாலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைப்படி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட வேண்டும். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கும்படி அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.

எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல்

அதன்படி நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் அருகில் உள்ள விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை விழுப்புரம் தாசில்தாரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் வினோத்குமார், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, கிராம நிர்வாக அலுவலர் உமாபதி உள்ளிட்ட அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

திண்டிவனம்-விக்கிரவாண்டி

திண்டிவனம் திரவுபதியம்மன் கோவில் அருகில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு மண்டல துணை தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர் சித்தார்த், கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வக்குமார், புகழரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு தாசில்தார் தமிழ்செல்வி முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் சார்லின், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்பாண்டியன், உதவியாளர் செந்தில் ரமேஷ், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் விஸ்வநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் ஆகியோர் சீல் வைத்தனர்.

வானூர்

வானூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு தாசில்தார் சங்கரலிங்கம் சீல் வைத்தார். மேலும் அங்கிருந்த கட்சி பேனர்கள் அகற்றப்பட்டது. அப்போது வானூர் வருவாய் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் தமிழிசை மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி-ரிஷிவந்தியம்

கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள பயணியர் மாளிகை எதிரே உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் அக்பர்பாஷா மற்றும் வருவாய்த்துறையினர் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி முன்னிலையில் சங்கராபுரம் தாசில்தார் சையத்காதர் பூட்டி சீல் வைத்தார். அப்போது அரியலூர் வருவாய் ஆய்வாளர் இளையராஜா, வாணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர், உதவியாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சங்கராபுரம்-உளுந்தூர்பேட்டை

சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத்காதர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர் திருமால், கிராம நிர்வாக அலுவலர் நிமலன் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் உளுந்தூர்பேட்டை, மயிலம், செஞ்சி எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com