

விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 59). இவர் விருத்தாசலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதாவின் செல்போன் எண்ணுக்கு கடந்த 11-ந் தேதியன்று ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்களுடைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரிசெய்ய பான் கார்டு எண்ணை புதுப்பிக்கும்படியும் குறிப்பிட்டு ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது.
இதை பார்த்த அவர், அந்த லிங்கிற்குள் சென்று பாஸ்வேர்டை பதிவு செய்து சில நிமிடங்களில் வந்த ஓ.டி.பி. எண்ணையும் பதிவு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை யாரோ மர்ம நபர் நூதன முறையில் ஏமாற்றி எடுத்திருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த சண்முகசுந்தரம், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.