திருப்பத்தூர் அருகே ஒரே தூக்கில் குழந்தையுடன் தொங்கிய தாய் சாவு

திருப்பத்தூர் அருகே ஒரே தூக்கில் குழந்தையுடன் தொங்கிய தாய் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே ஒரே தூக்கில் குழந்தையுடன் தொங்கிய தாய் சாவு
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே 2 வயது குழந்தையுடன் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் முயற்சியால் குழந்தை மீட்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

திருப்பத்தூர் தாலுகா கந்திலியை அடுத்த நார்சம்பட்டி காளி கோவில் பகுதியில் வசிப்பவர் சிலம்பரசன் (வயது 32), பால் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா (27). இருவருக்கும் கடந்தசில நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு சிலம்பரசனை கவிதா வேலைக்குச் செல்லுமாறு அனுப்பி விட்டு, நேற்று 6 காலை மணியளவில் கவிதா தனது 2 வயது மகன் ரிஷித்தை கொலை செய்ய முயன்று வீட்டு கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார். பின்னர் அதே தூக்கில் கவிதாவும் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

தூக்குக்கயிறு இறுகியபோது கவிதாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த அவருடைய மாமியார் நீலா ஓடி வந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகத் தொங்கியதைக் கண்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் ஜன்னலில் கையை விட்டு உள்தாழ்ப்பாளை திறந்து பார்த்தபோது, தூக்கில் பிணமாகத் தொங்கிய கவிதாவுக்கு அருகில் அவரின் 2 வயது மகன் ரிஷித் தூக்கில் தொங்கியபடி சுவற்றில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.

அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கவிதாவின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கவிதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால், வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருப்பத்தூர் உதவி கலெக்டர் அப்துல்முனீர் விசாரணை நடத்தி வருகிறார்.

மகனை தூக்கில் தொங்க விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கந்திலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com