

சுரண்டை:
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றார்
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கீழச்சுரண்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் காசிமணி மகன் முத்துக்குமார் (வயது 30). கூலித்தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சாம்பவர் வடகரை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியாகி விட்டது. எனவே மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சுரண்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
2 பேர் பரிதாப சாவு
அப்போது ஆய்குடியில் இருந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ராதாகிருஷ்ணன் மகன் சிவா (22) என்பவர் எதிர்பாராதவிதமாக முத்துக்குமார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் முத்துக்குமார், சிவா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமார், சிவா ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.