மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பலி

தூத்துக்குடி அருகே இரவில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஆயுதப்படை போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பலி
Published on

தூத்துக்குடி,

போலீஸ் ஏட்டு


தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை இந்திராநகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 51). இவர் தூத்துக்குடி ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று திரும்புவது வழக்கம். அதுபோல் நேற்று பணிக்கு சென்று விட்டு, இரவில் மோட்டார் சைக்கிளில் முருகன் வீட்டிற்கு புறப்பட்டார். தற்போது, தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில் நான்குவழிச்சாலையில் ஒருபுறம் பாலம் அமைக்கும் பணிநடைபெற்று வருவதால் ஒரே சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவில் கோரம்பள்ளம் பகுதியில் முருகன் மோட்டார் சைக்கிளில் வந்த போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கைமீட்டான் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் முத்துமாரியப்பன் (27) என்பவர் வந்து கொண்டு இருந்தார்.

2 பேர் பலி


கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் முருகன், முத்துமாரியப்பன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

இதுகுறித்து உடனடியாக புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாபம்


இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான முருகனுக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பலியான முத்துமாரியப்பன் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஐஸ் கம்பெனியில் பணியாற்றி வந்ததும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்தது.

இரவில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com