

கொடைக்கானல்,
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போனது. இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருடர்களை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார், கொடைக்கானல் அருகே பெருமாள்மலை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த மாயி என்ற மாயகிருஷ்ணன் (வயது 32) என்றும், பெரியகுளத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்றும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணம் இல்லை. அந்த மோட்டார் சைக்கிளை அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொடைக் கானல் பகுதியில் திருடப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேரும் மெக்கானிக் என்பது குறிப்பிடத்தக்கது.