

மராட்டியத்தில் மும்பை, தானே, புனே உள்பட 10 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 21-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
மும்பை
நாட்டின் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும், மும்பை மாநகராட்சியின் பதவி காலம் மார்ச் முதல் வாரத்தில் நிறைவு பெறுகிறது.
இதேபோல தானே, உல்லாஸ்நகர், புனே, நாக்பூர், நாசிக், பிம்பிரி-சின்ச்வாட், சோலாப்பூர், அமராவதி, அகோலா ஆகிய மாநகராட்சிகளின் பதவி காலமும் முடிய உள்ளது.
எனவே மும்பை உள்பட மேற்கண்ட 10 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வந்தன. இந்த நிலையில் 10 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் தேதியை நேற்று மாலை மாநில தேர்தல் கமிஷனர் ஜே.எஸ். சகாரியா அறிவித்தார்.
அதன்படி மும்பை உள்பட 10 மாநகராட்சிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதுகுறித்து ஜே.எஸ். சகாரியா நிருபர்களிடம் கூறியதாவது:-
வேட்பு மனு தாக்கல்
மும்பை உள்பட 10 மாநகராட்சிகளுக்கும் பிப்ரவரி 21-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக வருகிற 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 3-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். 4-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 7-ந் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள்.
தேர்தலில் பதிவான வாக்குகள் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது.
பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல்
இதேபோல 25 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 283 பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. அதன்படி பிப்ரவரி 16 மற்றும் பிப்ரவரி 21-ந் தேதிகளில் அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
இவ்வாறு மாநில தேர்தல் கமிஷனர் ஜே.எஸ். சகாரியா தெரிவித்தார்.
சிவசேனா வசம் மும்பை மாநகராட்சி
தேர்தல் நடைபெற உள்ள மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் நாட்டில் உள்ள பல சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட பெரியதாக இருக்கும். எனவே நாட்டின் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் மும்பை மாநகராட்சி மீது அனைத்து கட்சிகளுக்கும் ஒரு கண் உண்டு.
மும்பை மாநகராட்சியை 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக சிவசேனா தன் வசப்படுத்தி வந்துள்ளது. மேலும் இந்த மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுடன் பா.ஜனதா கூட்டணி வைத்து வந்துள்ளது.
கடந்த தடவை மும்பை மாநகராட்சிக்கு 2012-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் கடந்த தடவை கூட்டணி வைத்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 75 இடங்களும், அதன் கூட்டணியான பா.ஜனதாவுக்கு 31 இடங்களும் கிடைத்தன.
இதேபோல காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்களும் கிடைத்தன. நவநிர்மாண் சேனா கட்சி 27 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 9 இடங்களிலும் வெற்றி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே தேசியவாத காங்கிரஸ் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைக்குமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பல்வேறு உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எனவே மும்பை மாநகராட்சியையும் தன்வசப்படுத்த பா.ஜனதா முயற்சித்து வருகிறது. எனவே சிவசேனாவுடன் பா.ஜனதா கூட்டணி வைக்குமா? அல்லது தனித்து களம் காணுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.