நிலத்தகராறில் விவசாயி கல்லால் தாக்கி கொலை

வாத்தலை அருகே நிலத்தகராறில் விவசாயி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
நிலத்தகராறில் விவசாயி கல்லால் தாக்கி கொலை
Published on

கொள்ளிடம் டோல்கேட், செப்.25&
வாத்தலை அருகே நிலத்தகராறில் விவசாயி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
விவசாயிகள்
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள தெற்கு சித்தாம்பூர் அர்ஜுன தெருவை சேர்ந்தவர் மணி என்கிற மருதை (வயது 51). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில் (45) என்பவருக்கும் சித்தாம்பூர் அருகே அய்யாற்று பகுதியில் அருகருகே விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயிகளான இவர்கள் அங்கு விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில், மருதை தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு அருகே மின்மோட்டார் அமைத்திருந்தார். இதனை பார்த்த செந்தில் எனது இடத்தில் எப்படி வைக்கலாம் என்று கூறி மருதையிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக கடந்த 3 நாட்களாக மருதைக்கும், செந்திலுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.
கொலை
நேற்று காலை மருதை தெற்கு சித்தாம்பூர் கடைவீதியில் உள்ள மரத்தடியில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்தில் மருதையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இந்த தகராறு கைகலப்பாகியது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து மருதை மீது வீசினார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மருதைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் மருதை மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதனையடுத்து பரிசோதித்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இதற்கிடையில் செந்தில் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com