மர்மமாக இறந்த இலங்கை நிழல் உலக தாதா: அங்கடலொக்கா மதுரையில் தங்கியது எப்படி? கைதான பெண் வக்கீலின் தந்தை பரபரப்பு தகவல்

மர்மமாக இறந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கடலொக்கா குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அவர் மதுரையில் தங்கியது எப்படி? என்பது குறித்து கைதான மதுரை பெண் வக்கீலின் தந்தை தெரிவித்தார்.
மர்மமாக இறந்த இலங்கை நிழல் உலக தாதா: அங்கடலொக்கா மதுரையில் தங்கியது எப்படி? கைதான பெண் வக்கீலின் தந்தை பரபரப்பு தகவல்
Published on

மதுரை,

இலங்கை நிழல்உலக தாதா அங்கட லொக்கா. இவர் பிரதீப்சிங் என்ற பெயரில் மதுரை கூடல்புதூர் பகுதியில் தங்கி இருந்ததும், சில மாதங்களுக்கு முன்பு கோவையில் மர்மமாக இறந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக மதுரை வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியோனேஸ்வரன், அங்கடலொக்காவுடன் இருந்த அம்மானி தான்ஷி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மதுரை வக்கீல் சிவகாமிசுந்தரிதான் அங்கடலொக்கா, அவரது கூட்டாளி தங்குவதற்கான வீடுகளை பிடித்து கொடுத்ததாகவும், எனவே அங்கடலொக்கா மதுரை கூடல்நநகர் பகுதியில் தங்கிய வீட்டில் ஆயுதம் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரையில் அவர் தங்கியிருந்த வீடுகளில் தரை மற்றும் பாதாள சாக்கடை அமைப்பு உள்ளிட்ட பகுதியில் தோண்டி சோதனை செய்தனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காலை சிவகாமிசுந்தரியின் தந்தை தினகரன் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திலும் சிவகாமிசுந்தரியின் தந்தை தினகரனிடம் கோவை, மதுரையை சேர்ந்த அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து தினகரன் கூறியதாவது:-

எனக்கு இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பழக்கம். அவர் தமிழகத்தில் பொருட்களை வாங்கி இலங்கையில் வியாபாரம் செய்து வந்தார். அவர்தான் என்னிடம் துபாயை சேர்ந்த ஒருவர் சிகிச்சைக்காக மதுரை வர உள்ளதாகவும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து தருமாறும் கூறினார். அவர் கூறியபடி நான் 2017-ம் ஆண்டு சென்னை சென்று அந்த நபரை மதுரைக்கு பஸ்சில் அழைத்து வந்தேன். அவர் தன்னுடைய பெயர் பிரதீப் என்றும், துபாயில் ஓட்டல் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். எனது மகன் கேட்டரிங் படித்தால் அவர் மூலம் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கலாம் என்ற ஆசையில் அவரை எனது வீட்டில் தங்க வைத்தேன். அவர் இந்தியில்தான் பேசினார். அவர் நெற்றி நிறைய விபூதியுடன் இருப்பார். நான் அடிக்கடி மது அருந்தியது அவருக்கு பிடிக்கவில்லை. என்னை மது அருந்தக்கூடாது என்றார். இதனால் எனக்கும் அவருக்கும் சரியாக வரவில்லை. ஆகவே எனது மகளை அவரை பார்த்துக்கொள்ளுமாறு அனுப்பி வைத்து விட்டேன். அவர் ஒத்திக்கு வீட்டை பிடித்து அவரை தங்க வைத்தார். சுமார் 3 மாதங்கள் தங்கியிருந்த அவர் அதன் பின்னர் எங்கு சென்றார்? என்பது எனக்கு தெரியாது. டி.வி.யில் அவரது படத்தை காண்பித்தபோதுதான், நான் அழைத்து வந்த நபர் அங்கடலொக்கா என்று தெரியவந்தது.

எனது மகள் சிவகாமிசுந்தரிக்கு அங்கடலொக்கா இறந்த பிறகு போன் மூலம் தகவல் வந்தது. அதன்பின்னர் அவர் கோவை சென்றார். அங்கு அவரது உடலை பார்த்த பிறகு அவரது சாவில் மர்மம் உள்ளதாக எனது மகள்தான் போலீசில் புகார் அளித்தார். அதன் பின்னர்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதை தொடர்ந்து எனது மகள் அவர் இறப்பு சான்றிதழ், பிரேத பரிசோதனை சான்று ஆகியவற்றை வாங்கி மதுரையில் வந்து தத்தனேரி மயானத்தில் அனைத்து சான்றிதழ்களையும் காண்பித்து எரித்ததாக தெரிவித்தார்.

அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையை கூட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. ஆனால் எனது மகள் மீது போலியான ஆவணங்கள் தயாரித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு ஆயுதக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டேன். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் எனது வீட்டை எல்லாம் விற்று செலவு செய்து தான் வழக்கில் இருந்து என்னை காப்பாற்றினார்கள். அதன்பின்னர்தான் நான் மதுரைக்கு வந்தேன்.

அங்கடலொக்கா வழக்கு குறித்து விசாரணை சரியான பாதையில்தான் செல்கிறது. எங்கள் வீட்டில் வந்து சோதனை செய்தனர். அவர்களால் எந்த ஆயுதத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. மடியில் கனம் இருந்ததால்தானே பயம் இருக்கும். விசாரணையில் தெரிவித்த தகவலை தான் மீண்டும் தெரிவிக்கிறேன். எனது மகளை தற்போது வரை பார்க்க முடியவில்லை. அவளை ஜாமீனில் எடுப்பதற்கான வேலைகளை செய்து வருகிறேன். டி.வி.யில் நாங்கள் பெரிய பணக்காரராக இருப்பதாக கூறுகிறார்கள். விசாரணைக்கு ஆட்டோ பிடித்து செல்வதற்கு கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com