நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சி விரைவில் 3–ம் நிலை நகராட்சியாக தரம் உயரும் அதிகாரி தகவல்

நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சி விரைவில் 3–ம் நிலை நகராட்சியாக தரம் உயருகிறது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சி விரைவில் 3–ம் நிலை நகராட்சியாக தரம் உயரும் அதிகாரி தகவல்
Published on

வண்டலூர்,

தரம் உயர்த்த முடிவு

சென்னையை அடுத்துள்ள நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பேரூராட்சியில் அடுக்குமாடிகள் உள்பட சுமார் 12 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கொடுப்பு படி 44 ஆயிரத்து 98 பேர் உள்ளனர். ஆனால் தற்போது கணக்குப்படி 62 ஆயிரம் பேர் உள்ளனர். மொத்தம் 46 ஆயிரத்து 820 வாக்காளர்கள் உள்ளனர்.

பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. தற்போது நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியை தமிழக அரசு 3ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு முடிவு செய்து அதற்கான பணிகளை முடித்து விட்டது. மிக விரைவில் இதற்கான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும்.

நகராட்சியாக தரம் உயர்ந்தால் இந்த பகுதி மேலும் வளர்ச்சி அடையும் பொதுமக்களுக்கு பாதாளசாக்கடை திட்டம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும். தற்போது பேரூராட்சியாக இருப்பதால் குறைந்த அளவில் ஊழியர்கள் உள்ளனர். நகராட்சியாக தரம் உயர்ந்த பிறகு சுமார் 80க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் தினமும் சுகாதார பணியில் ஈடுபடுவார்கள்.

நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டு அவருக்கு கீழ் 50க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னைக்கு மிக அருகில் உள்ள நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் பாதாளசாக்கடை திட்டம், குடிநீர் வசதி, துப்பரவு பணி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சியாக உள்ள காரணத்தால் இது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு போதிய நிதி ஆதாரம் கிடைக்கவில்லை, இதனால் நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியை 3ம் நிலை நகராட்சியாக உயர்த்துவதன் மூலம் தமிழக அரசிடம் இருந்து அதிக நிதி பெற்று இந்த பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கு வசதியாக இருப்பதற்காகவும், பொதுமக்களின் தேவைகள் அதிகமாக இருப்பதால் 3ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மிக விரைவில் தமிழக அரசு வெளியிடும்.

இவ்வாறு நகராட்சி அதிகாரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com