ஆண்டிப்பட்டி அருகே, ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

ஆண்டிப்பட்டி அருகே ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே, ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு
Published on

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி தாலுகா தங்கம்மாள்புரம் அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் சுப்புலட்சுமி(வயது 25). இவருக்கும் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமாருக்கும்(29) கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது சுப்புலட்சுமிக்கு 22 பவுன் நகை, ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் சுப்புலட்சுமியிடம் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் வரதட்சணையாக ரூ.50 லட்சம் கொண்டு வர வேண்டும் என கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் வரதட்சணை கேட்டு சுப்புலட்சுமியை கொடுமைபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கணவர் சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நாகராஜ், பிரபு, சாத்துராம், சங்கரேஸ்வரி, பங்கஜவள்ளி ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com