பவானி அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை திருட்டு

பவானி அருகே வீடு புகுந்து 15 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பவானி அருகே வீடு புகுந்து 15 பவுன் நகை திருட்டு
Published on

பவானி,

பவானி அருகே உள்ள சீதபாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 47). தொழிலாளி. இவருடைய மனைவி நிர்மலா (40). இவர்களுக்கு ரஞ்சித் (15) என்ற மகனும், கிஷோத்திரி (9) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தேவராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது.

நள்ளிரவு 12 மணி அளவில் தேவராஜின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் 2 பேர் புகுந்தனர். பின்னர் வீட்டின் உள்ள மேசையில் வைக்கப்பட்டு இருந்த மோதிரம் உள்பட 15 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிவிட்டு, அங்கிருந்து நைசாக செல்ல முயன்றனர்.

அப்போது வீட்டில் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த தேவராஜின் மனைவி நிர்மலா, திருடன் திருடன் என்று சத்தம் போட்டு கத்தினார். இதனால் தூங்கிக்கொண்டு இருந்த தேவராஜ் எழுந்து வந்தார். மேலும் அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டனர். எனினும் மர்மநபர்கள் 2 பேரும் 15 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுபற்றி பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com