செங்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

செங்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்
Published on

செங்கம்,

செங்கத்தை அடுத்துள்ள முத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32). இவர், நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்களான சின்னசாமி மற்றும் இந்திராணி ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அம்மாபாளையம் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஏழுமலை ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சின்னசாமி, இந்திராணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கம் அரசு மருத்துவமனை அருகே ஏழுமலையின் உறவினர்கள் விபத்துக்கு காரணமான லாரியை கண்டுபிடிக்க கோரி செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து செங்கம் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com