சென்னிமலை அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் படுகாயம்

சென்னிமலை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னிமலை அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
Published on

சென்னிமலை,

கவுந்தப்பாடியை அடுத்த பெருமாள்பாளையம் காலனியை சேர்ந்தவர் பட்டத்தரசு (வயது 30). சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குப்பக்கவுண்டன்வலசு பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் அவருடைய மனைவி அமராவதி (28), அமராவதியின் தங்கை சாந்தி, அவர்களுடைய உறவினர்களான பெருமாள்பாளையம் காலனியை சேர்ந்த துளசிமணி (33), சகாதேவன் (40), கிருஷ்ணமூர்த்தி (43) உள்பட 20 பேர் சென்றனர்.

சென்னிமலையை அடுத்த கணுவாய் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் பட்டத்தரசு, அமராவதி, சாந்தி, துளசிமணி, சகாதேவன், கிருஷ்ணமூர்த்தி உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 15 பேரையும் மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com