கும்மிடிப்பூண்டி அருகே மாயமான வேன் டிரைவர் பிணமாக மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே மாயமான வேன் டிரைவர், காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அருகே மாயமான வேன் டிரைவர் பிணமாக மீட்பு
Published on

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிப்காட் அருகே உள்ள பாத்தபாளையம் கிராமத்தைச்சேர்ந்தவர் ராஜீ(வயது 25). வேன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 21-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜீ, அதன்பிறகு மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

இந்த நிலையில் நேற்று பாதிரிவேடு அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதிரிவேடு போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபரின் உடலை மீட்டு விசாரித்தனர். அதில் அவர், மாயமான வேன் டிரைவர் ராஜீ என்பது தெரிந்தது.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் ராஜீ, காட்டுப்பகுதியில் உள்ள அந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து விட்டு உடலை மரத்தில் தொங்க விட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com