ஓசூர் அருகே, பட்டதாரி பெண் தற்கொலை - மனமுடைந்த காதலனும் தூக்குப்போட்டு சாவு

ஓசூர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து மனமுடைந்த அவருடைய காதலனும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓசூர் அருகே, பட்டதாரி பெண் தற்கொலை - மனமுடைந்த காதலனும் தூக்குப்போட்டு சாவு
Published on

ஓசூர்,

ஓசூர் அருகேயுள்ள பாகலூர் முனீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவருடைய மகன் மஞ்சுநாத் (வயது 24). இவர் பாகலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். பெங்களூரு கக்கலிபுரா பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவருடைய மகள் சவுந்தர்யா (22). இவர், பி.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு, பாகலூர் முனீஸ்வரர் நகரில் உள்ள தனது தாய்மாமன் வீட்டில் தங்கி இருந்தார்.

மஞ்சுநாத் வீடும், சவுந்தர்யா வீடும் அருகருகே இருந்ததால், அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் அடிக்கடி செல்போனிலும், நேரிலும் பேசிக்கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு மஞ்சுநாத்தும், சவுந்தர்யாவும் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை திடீரென சவுந்தர்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த காதலன் மஞ்சுநாத்தும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் காதலர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சவுந்தர்யா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மனமுடைந்த காதலன் மஞ்சுநாத்தும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல்ஜோடி தற்காலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com