ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
Published on

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை ஒன்றியம், பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் வட்டம், மதலைமடுகு, ரெட்டியூர் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளை கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்றும், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் - வாணியம்பாடி மெயின் ரோட்டில் ரெட்டியூர் கூட்ரோடு என்ற இடத்தில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கவுரிசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com