கண்டமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் சாவு பொம்மையை எடுக்கச்சென்ற போது பரிதாபம்

கண்டமங்கலம் அருகே குட்டையில் விழுந்த பொம்மையை எடுக்கச்சென்ற சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
கண்டமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் சாவு பொம்மையை எடுக்கச்சென்ற போது பரிதாபம்
Published on

விழுப்புரம்,

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருடைய செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இதற்காக காமராஜ், அதே செங்கல் சூளை அருகில் ஒரு கொட்டகை அமைத்து குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் பூமிநாதன் (வயது 6). இவன் நவமால்மருதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் பூமிநாதன், வீட்டிற்கு வந்தான். பின்னர் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த பூமிநாதனை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடினர்.

அப்போது அதே செங்கல் சூளையில் உள்ள ஒரு குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிறுவன் பூமிநாதன் பிணமாக மிதந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவன் பூமிநாதனை மீட்டு அவனது உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவன் பூமிநாதன் விளையாடிக்கொண்டிருந்த போது, அவன் வைத்திருந்த பொம்மை அங்குள்ள குட்டையில் விழுந்ததும் அந்த பொம்மையை எடுக்கச்சென்றபோது பூமிநாதன் தவறி அந்த குட்டையில் விழுந்ததில் நீரில் மூழ்கி இறந்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com