

பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள கேரள பகுதியான வைத்திரி கொளுதன்னா என்ற ஆதிவாசி கிராமத்துக்குள் ஒரு பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் துப்பாக்கியுடன் திடீரென புகுந்தனர்.
அங்குள்ள மொய்தீன் என்பவரது வீட்டுக்கு சென்ற அவர்கள், அவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி அரிசி, பருப்பு மற்றும் டீத்தூள் ஆகியவற்றை வாங்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கேரளாவில் உள்ள மேப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
நள்ளிரவில் வீடு புகுந்து அரிசி, பருப்புகளை வாங்கி சென்ற மாவோயிஸ்டுகள் ஏற்கனவே தேடப்பட்டு வரும் மாவோயிஸ்டுகளா? அவர்கள் எந்த வழியாக சென்றார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
ஆதிவாசி கிராமத்துக்குள் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் புகுந்த சம்பவம் குறித்து தமிழக, கர்நாடக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு தடுப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.