போரூர் அருகே டீ கடையில் தீ விபத்து

போரூரை அடுத்த காட்டுப்பாக்கத்தில் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் டீ கடை நடத்தி வந்தார். கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கட்டிடத்துக்கும் தீ பரவியது.
போரூர் அருகே டீ கடையில் தீ விபத்து
Published on

பூந்தமல்லி,

சென்னை போரூரை சேர்ந்தவர் ரவி. இவர், போரூரை அடுத்த காட்டுப்பாக்கத்தில் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் டீ கடை நடத்தி வந்தார். நேற்று அதிகாலை இவரது டீ கடைக்குள் இருந்து புகை வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் டீ கடை தீப்பிடித்து எரிந்தது. இதில் கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கட்டிடத்துக்கும் தீ பரவியது.

அதற்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி டீ கடையில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் வங்கி கட்டிடத்தில் பரவிய தீயும் உடனடியாக அணைக்கப்பட்டது. எனினும் தீ விபத்தில் டீக்கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடைக்குள் இருந்த மைக்ரோ ஓவன், மேஜை, சேர்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீக்கீரையாகின. வங்கியின் பெயர் பலகையும், முன்புற கண்ணாடியும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையத்துக்கு உள்ளே தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டீ கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com