சங்கரன்கோவில் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி மாணவர் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மாணவர் படுகாயம் அடைந்தார்.
சங்கரன்கோவில் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி மாணவர் படுகாயம்
Published on

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகபாண்டி (வயது 46). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவிலில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ராஜபாளையம் ரோட்டில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவர் கண்டிகைப்பேரியை சேர்ந்த சத்திய பிரபாகரன் (12) அவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். உடனே சண்முகபாண்டி, சத்திய பிரபாகரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, கண்டிகைப்பேரி நோக்கி சென்றார். கண்டிகைப்பேரி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மணல் லாரி சண்முகபாண்டி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சண்முகபாண்டி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சத்திய பிரபாகரன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சத்திய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் கண்டிகைப்பேரியை சேர்ந்த செந்தூர்பாண்டி (27) என்பவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com