தாரமங்கலம் அருகே, போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை அகதி கைது

தாரமங்கலம் அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை அகதியை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தாரமங்கலம் அருகே, போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை அகதி கைது
Published on

தாரமங்கலம்,

தாரமங்கலத்தை அடுத்த பவளத்தானூர் அருகே குருக்குப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு ஏராளமான இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இந்த முகாமில் வசிக்கும் வாலிபர் ஒருவர் வெளிநாடு செல்ல முடிவு செய்து அதற்காக அவரே போலியாக பாஸ்போர்ட் தயாரிப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சேலம் கியூ பிரிவு போலீசார் குருக்குப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்றனர். பின்னர் அங்கு உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒருவரது வீட்டில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வைத்து இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

இதையொட்டி அந்த வீட்டில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த முகாமை சேர்ந்த இலங்கை அகதியான ஜோசுவா என்பவரது மகன் ரிஜிப்பன் (வயது 21) என்றும், அவர் போலி பாஸ்போர்ட் தயாரித்ததையும் ஒப்புக்கொண்டார். இதையொட்டி போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் இலங்கையில் இருந்து அகதியாக வந்ததில் இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்ததாகவும், இதில் போதிய வருமானம் இல்லாததால் வெளிநாடு செல்ல முடிவு செய்து அதன்படி ஆஸ்திரேலியா செல்வதற்காக போலியாக பாஸ்போர்ட் தயாரித்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதையொட்டி அவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், முகாமில் உள்ள இளைஞர்கள், ரிஜிப்பனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை அகதி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com