நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தந்தை பலி; மகள் படுகாயம் டிரைவர் கைது

நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தந்தை பரிதாபமாக இறந்தார். அவரது மகள் படுகாயமடைந்தார். இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தந்தை பலி; மகள் படுகாயம் டிரைவர் கைது
Published on

நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மறவாபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 63). விவசாயி. இவரது மகள் கீதா (33). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். நாணப்பரப்பு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூர் நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி, கீதா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து, படுகாயமடைந்த தந்தை-மகளை மீட்டு ஆம்புலன்சு மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி பரிதாபமாக இறந்தார்.

கீதாவை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து துரைசாமியின் அண்ணன் மகன் முருகேசன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் வழக்குப்பதிவு செய்து, துரைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியை சேர்ந்த துரை சம்பத் (61) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com