வேப்பந்தட்டை அருகே பரிதாபம்: சரக்கு ஆட்டோவுக்குள் சிக்கிய - பெண் குழந்தை மூச்சுத்திணறி சாவு

வேப்பந்தட்டை அருகே சரக்கு ஆட்டோவுக்குள் சிக்கிய பெண் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது.
வேப்பந்தட்டை அருகே பரிதாபம்: சரக்கு ஆட்டோவுக்குள் சிக்கிய - பெண் குழந்தை மூச்சுத்திணறி சாவு
Published on

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் இருந்து வெண்பாவூர் செல்லும் சாலையில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். விவசாயியான இவர், சொந்தமாக சரக்கு ஆட்டோவும் வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு தனிஷ்கா(வயது 8), மிஸ்மிதாஸ்ரீ (2) என இரண்டு மகள்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும், தங்களுடைய மகள்களை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். இதையடுத்து தனிஷ்காவும், மிஸ்மிதாஸ்ரீயும் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் டிரைவர் இருக்கை பகுதியில் ஏறி விளையாடினர்.

அப்போது சரக்கு ஆட்டோவின் இரண்டு கதவுகளும் எதிர்பாராதவிதமாக மூடிக்கொண்டன. இதில் ஆட்டோவுக்குள் தனிஷ்காவும், மிஸ்மிதாஸ்ரீயும் மாட்டிக்கொண்டனர். இதில் மிஸ்மிதாஸ்ரீ மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்தாள்.

இதையறிந்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து சரக்கு ஆட்டோ கதவை உடைத்து, 2 பேரையும் மீட்டனர். பின்னர் மிஸ்மிதாஸ்ரீயை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மிஸ்மிதாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com