திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகை-பணம் திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் நகை-பணம் திருட்டு
Published on

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கோவுலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் பழனிச்சாமி (வயது 32), கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவி ஈஸ்வரி (27), மகன்கள் சதீஷ் (6), ராஜேஷ் (4) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டனர்.

பின்னர் நேற்று காலை 10 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் திடுக்கிட்டனர்.

உடனே வீட்டினுள் சென்று பார்த்தபோது மர பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். கூவாகம் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பழனிச்சாமி வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com