துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு

துறையூர் அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கும், போலீஸ் ஏட்டுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் கதவை இழுத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு
Published on

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள புலிவலம் பகுதியில் வசித்து வரும் 25 வயது வாலிபரும், 27 வயது பெண்ணும் காதலித்தனர். தன்னை விட 2 வயது அதிகம் உள்ளவர் என்றாலும் அப்பெண்ணை, அந்த வாலிபர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்னை செல்வதாக கூறி சென்ற அந்த வாலிபர் அதன் பிறகு ஒருமுறை கூட புலிவலம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக புலிவலம் போலீஸ் நிலையத்தில் காதல் மனைவி புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட ஏட்டு ராமர்(45), விசாரணைக்காக அப்பெண்ணை பலமுறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளார். மேலும், அவரது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு அந்த எண்ணிலும் அடிக்கடி பேசி வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

அதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு, ஏட்டு ராமர் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனை, அப்பகுதி மக்கள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராமர், அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார். அவர்கள் உள்ளே ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் கதவை வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டினர். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் கள்ளக்காதல் ஜோடி தவித்தது.

பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து ஏட்டு ராமரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது, சிலர் தங்களது செல்போன்களில் ஏட்டு ராமரை வீடியோ எடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராமர், கூச்சலிட்டார். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், கிராம மக்களை சமாதானப்படுத்திய போலீசார், ராமரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதுதொடர்பாக அந்த வாலிபரின் சகோதரி, புலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், புகாரை ஏற்க போலீசார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். அதன்பிறகு, புகாரை பதிவு செய்ய அறிவுறுத்தியதோடு ராமரை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

திருமணமான ராமருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com