திருக்கனூர் அருகே சோரப்பட்டு ஏரியை கவர்னர் ஆய்வு

திருக்கனூர் அருகே சோரப்பட்டு ஏரியை கவர்னர் ஆய்வு தூர்வாரி, கரையை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
திருக்கனூர் அருகே சோரப்பட்டு ஏரியை கவர்னர் ஆய்வு
Published on

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே உள்ள சோரப்பட்டு ஏரியை கவர்னர் கிரண்பெடி நேற்றுக் காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏரியை தூர் வாரும்படியும், ஏரிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை பலப்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள சோரப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், ஏரி வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதாகவும் கவர்னர் கிரண்பெடிக்கு புகார்கள் வந்தன.

அதைத் தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நேற்றுக் காலை சோரப்பட்டு கிராமத்துக்கு சென்று ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையாளர் சீத்தாராமனிடம் ஏரியின் வரைபடத்தை வாங்கி பார்வையிட்டு ஏரியின் பரப்பளவு, கொள்ளளவு ஆகிய விவரங்களை கேட்டறிந்தார்.

அந்த ஏரியை தூர் வாரும்படி, ஒரு மாத காலத்துக்குள் ஏரிக்கரை ஆக்கிரமிப்பை அகற்றி ஏரிக்கரையை பலப்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அடுத்த மாதம் (ஜூலை) 28ந் தேதி மீண்டும் அந்த ஏரியை பார்வையிட வருவதாகவும் கவர்னர் தெரிவித்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த கிராம மக்கள், இந்த ஏரிக்கரையையொட்டி சாராயக்கடை மற்றும் மதுக்கடை ஆகியவை உள்ளதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் கவர்னர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட கலால்துறை ஆணையரிடம் புகார் அளிக்கும்படியும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தன்னை கவர்னர் மாளிகையில் வந்து பார்த்து புகார் அளிக்கும்படியும் தெரிவித்தார். அதன் பின்னர் கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த ஆய்வின்போது மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் வரதன் ஆகியோர் உடனிருந்தனர். பெரும்பாலான அதிகாரிகள் வராததால் கவர்னர் அதிருப்தி அடைந்தார்.

ஆய்வை முடித்துக்கொண்டு கவர்னர் புறப்பட தயாரானபோது, வம்புபட்டு கிராம மக்கள் கவர்னரை வந்து சந்தித்து, தங்கள் கிராமத்தில் உள்ள வம்புபட்டு ஏரியையும் ஆய்வு செய்ய வரவேண்டும் என்று கூறி அழைத்தனர். ஆனால் கவர்னர் பின்னர் பார்க்கலாம் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டதால் அந்த கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கவர்னரை புறக்கணித்த அதிகாரிகள்

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கவர்னர் கிரண்பெடி புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்வது வழக்கம். அந்த ஆய்வின்போது புதுச்சேரி அரசின் பெரும்பாலான துறைகளின் உயர் அதிகாரிகள் கவர்னருடன் சென்று வந்தனர்.

ஆனால் நேற்றுக்காலை கவர்னர் கிரண்பெடி சோரப்பட்டு ஏரியை பார்வையிட சென்றபோது, அவரை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டனர். இந்த ஆய்வு நிகழ்ச்சியில் கொம்யூன் ஆணையர் உள்பட 3 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கவர்னர் ஆய்வு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர்.

அதேபோல் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ.வான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபிகாவும் கவர்னர் ஆய்வு நிகழ்ச்சிக்கு வரவில்லை.

முதல்அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களையும் கவர்னர் விமர்சித்து வருவதால் கவர்னரை புறக்கணிக்கும்படி பொது மக்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்தநிலையில் ஆய்வு நிகழ்ச்சியை அதிகாரிகள் புறக்கணித்துள்ளதால் கவர்னர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com