உளுந்தூர்பேட்டை அருகே, காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - குடிநீர் வழங்கக்கோரி நடந்தது

உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே, காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - குடிநீர் வழங்கக்கோரி நடந்தது
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புதுக்கேணி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் ஆசனூர்-திருவண்ணாமலை சாலையில் புதுக்கேணி பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், எங்கள் பகுதியில் மின் மோட்டார் பழுதாகி பல நாட்கள் ஆகிறது. இதனால் நாங்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும், விளை நிலங்களுக்கும் சென்று குடிநீர் பிடித்து வருவதால் நாங்கள் மிகவும் சிரமமடைகிறோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com