வேதாரண்யம் அருகே கடற்கரையில் கிடந்த 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள்

வேதாரண்யம் அருகே கடற்கரையில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கிடந்தன. இவை கடத்தி செல்லப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே கடற்கரையில் கிடந்த 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடல் வழியாக தங்கம் கட்டிகள் மற்றும் கஞ்சா ஆகியவை அடிக்கடி இலங்கைக்கு கடத்தி செல்லப்படுகிறது. இதை தடுக்க கடலோர காவல் குழும போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வேதாரண்யம் அருகே மணியன்தீவு கடற்கரை பகுதியில் நேற்று காலை, 8 மர்ம பொட்டலங்கள் கரை ஒதுங்கி கிடந்தன. இதை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சின்னையன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வைரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு கிடந்த மர்ம பொட்டலங்களில் ஒன்றை பிரித்து பார்த்தனர். அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

ஒவ்வாரு பொட்டலங்களிலும் 2 கிலோ வீதம் மொத்தம் 16 கிலோ கஞ்சா இருந்தது. இதை தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல வேதாரண்யம் அருகே ஆறுக்காட்டுத்துறையில் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப் படுகிறது

இதுகுறித்து கடலோர காவல் குழு போலீசார் வழக்குப் பதிவு செய்து, யாராவது கடத்தி சென்ற போது கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கஞ்சா பொட்டலங்கள் கடலில் விழுந்து கரை ஒதுங்கியதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் 18 கிலோ கஞ்சா கரை ஒதுங்கி கிடந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com