விளாத்திகுளம் அருகே, அரசு பஸ் டிரைவர், மீனவர் மீது தாக்குதல், அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

விளாத்திகுளம் அருகே அரசு பஸ் டிரைவர், மீனவர் மீது தாக்குதல் நடத்திய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம் அருகே, அரசு பஸ் டிரைவர், மீனவர் மீது தாக்குதல், அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
Published on

விளாத்திகுளம்,

தூத்துக்குடி தருவைக்குளம் அம்புரோஸ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆரோக்கியம். அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி அந்தோணி ஜெபமாலை ராக்கினி (வயது 32). இவர் நேற்று முன்தினம் விளாத்திகுளம் அருகே கீழ சண்முகபுரத்தில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த உறவினரான துரைராஜ் மகன் ஆமோஸ் ராஜா (25) குடும்ப பிரச்சினை காரணமாக அந்தோணி ஜெபமாலை ராக்கினியை அவதூறாக பேசினார்.

இதனை ஆரோக்கியம், அவருடைய உறவினரான மீனவர் ஜெயசிங் ஆகிய 2 பேரும் தட்டி கேட்டனர். அப்போது ஆமோஸ் ராஜா, அவருடைய அண்ணன் அகஸ்டின் ராஜா (27), ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் என்.வேலாயுதபுரத்தைச் சேர்ந்த முனியசாமி (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆரோக்கியம், ஜெயசிங் ஆகிய 2 பேரையும் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆமோஸ் ராஜா, அகஸ்டின் ராஜா, முனியசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com