மும்பைக்கு முதல் மழை கற்று தந்த பாடம் மழைநீர் தேங்குவதை தடுக்க துரித நடவடிக்கை தேவை

இயற்கையின் உத்தரவுக்கு மனித இனம் மண்டியிட்டு தான் ஆக வேண்டும். இயற்கை பேரிடர்களை தடுத்து நிறுத்த முடியாது.
மும்பைக்கு முதல் மழை கற்று தந்த பாடம் மழைநீர் தேங்குவதை தடுக்க துரித நடவடிக்கை தேவை
Published on

யற்கையின் உத்தரவுக்கு மனித இனம் மண்டியிட்டு தான் ஆக வேண்டும். இயற்கை பேரிடர்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அவற்றை எதிர்கொள்ள தயார் நிலைகளை ஏற்படுத்தி கொள்வது தான் சாமர்த்தியம்.

2005ம் ஆண்டு இயற்கை மும்பைக்கு ஒரு பாடத்தை கற்று தந்தது. அதில் ஏற்பட்டதை போன்ற தாக்கம் இன்னும் தொடர்வது தான் வேதனை. அந்த ஆண்டில் வரலாறு காணாத வகையில் பேய்மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது மும்பை நகரமே தண்ணீரில் தத்தளித்தது. உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் ஏற்பட்டது. மழைநீர் வழிந்தோடுவதற்கு வசதியாக சாக்கடைகள் தூர்வாரப்படாமல் இருந்ததே வெள்ளபாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது.

அந்த வெள்ளத்திற்கு பிறகு ஆண்டு தோறும் மும்பையில் உள்ள பெரிய மற்றும் சிறிய சாக்கடைகள் மாநகராட்சியால் தூர்வாரப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சாக்கடைகளை தூர்வாரும் பணியை செய்தது. ஆனால் தூர்வாரும் பணிகளில் முறைகேடு நடக்கிறது என்று மாநகராட்சி எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசின. ஆனால் மாநகரை ஆண்டு வரும் சிவசேனா அமைதி காத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று சாக்கடை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது நகரில் தூர்வாரும் பணிகள் 75 சதவீதம் வரையிலும் சிறப்பான முறையில் நடந்து உள்ளதாக தெரிவித்தார்.

இந்த பணிகளை பல்வேறு இடங்களில் பார்வையிட்ட பா.ஜனதா மும்பை தலைவர் ஆஷிஸ் செலார் நகரில் பல இடங்களில் சாக்கடைகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவே இல்லை, சாக்கடைகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. சாக்கடை தூர்வாரும் பணியில் இந்த ஆண்டும் ஊழல் நடக்கிறது. ஒப்பந்ததாரர்கள் செய்யும் தவறுகளை சிவசேனா மூடி மறைக்கிறது என்று கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மும்பை தலைவர் சஞ்சய் நிருபம், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ரவிராஜா ஆகியோர் சாக்கடை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டனர். அப்போது அவர்கள், மும்பையில் சாக்கடை தூர்வாரும் பணிகள் மேலோட்டமாக தான் செய்யப்பட்டு உள்ளது. வெறும் 20 முதல் 25 சதவீதமே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி எந்த ஒரு முறையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பல இடங்களில் மழையின் போது தண்ணீர் தேங்கும். தண்ணீர் தேங்காமல் தடுப்பதற்கான எந்த முன்னெச்ரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.

இந்த புகார்களை தொடர்ந்து, சாக்கடை தூர்வாரும் பணியை ஆய்வு செய்த மாநகராட்சி தலைமை என்ஜினீயரும், சாக்கடை தூர்வாரும் கமிட்டி இயக்குனருமான பிரகாஷ் கதம் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இந்த நிலையில், மும்பையில் கடந்த 12ந் தேதி பருவமழை பெய்ய தொடங்கியது. அன்று ஒரு மணி நேரம் வரையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது நகரில் சயான், மாட்டுங்கா, தாதர், ஒர்லி உள்ளிட்ட 41க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் குளமாக தேங்கியது. சாலைகள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வான பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

சிவசேனாவின் கூட்டணி கட்சியான பா.ஜனதாவும், எதிர்க்கட்சிகளும் கூறிய குற்றசாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக மேற்கண்ட வெள்ளக்காட்சிகள் அரங்கேறின.

இந்த நிலை தொடர்வது ஏன்?. தூர்வாரும் பணிகள் திறம்பட நடைபெறவில்லையா?. 2005ல் மழை புகட்டிய பாடம் மறந்து போய் விட்டதா?. அடுத்து பெய்யும் மழைகளில் எல்லாம் சரியாகி விடுமா?. அல்லது வேதனை தொடரத்தான் செய்யுமா?. இது தான் பலதரப்பு மக்களின் கேள்வியாக உள்ளது.

2005ம் ஆண்டில் இயற்கை கற்று கொடுத்த பாடத்தை மறந்து விட்டாலும், இந்த ஆண்டு முதல் மழையிலேயே 41 இடங்களில் மழை நீர் தேங்கியதை பாடமாக எடுத்து கொண்டு தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் மும்பை பெருநகர மக்களின் அவசர கோரிக்கையாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com