

கள்ளக்குறிச்சி
ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக கடைபிடிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
தவிர்க்க வேண்டும்
தேர்தல் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அருகில் 5 கி.மீ சுற்றளவு வரை தேர்தல் நடத்தை விதிகள், நடைமுறைகள் முடியும் வரை அமலில் இருக்கும். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் இதர வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளக்கூடாது.
வாக்குகளை பெற சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டுகோள் விடுக்க கூடாது. கட்சியினரோ, வேட்பாளர்களோ அல்லது தொண்டர்களோ தனிப்பட்ட வாழ்க்கையின் தன்மைகள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். எழுத்துப்பூர்வ அனுமதியின்றி தேர்தல் விளம்பரங்கள் அனுமதிக்கக்கூடாது.
ஊர்வலங்கள் நடத்த கூடாது
தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு முடிவு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலிருந்து முந்தைய 48 மணி நேரத்தில் பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்தக்கூடாது. எந்த வேட்பாளரும் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேலாக தேர்தல் செலவினங்கள் செய்யக்கூடாது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவினங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உரிய அனுமதி பெறாமல் பிரசார வாகனங்கள், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. தேர்தல் பிரசாரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
3 நபர்களுக்கு மிகாமல்
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்பகுதிகளில் புதிய திட்டங்கள், நிகழ்ச்சிகள், சலுகைகள், மானியங்கள், அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிகளை தொடரலாம்.
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் சேர்த்து 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு மாநில தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றி 3 நபர்களுக்கு மிகாமல் பிரசாரம் செய்ய வேண்டும்.
முககவசம் அணிந்து
முககவசம் மற்றும் கையுரைகள் அணிந்தும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு வேட்பாளரும் மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுடனும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.