தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றபோது கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சாவு கணவர் கண் எதிரே பரிதாபம்

தீபாவளியை கொண்டாட கணவருடன் சொந்த ஊருக்கு சென்றபோது கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி, கணவர் கண் எதிரேயே பெண் பரிதாபமாக இறந்தார்.
தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றபோது கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சாவு கணவர் கண் எதிரே பரிதாபம்
Published on

பூந்தமல்லி,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 40). அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி தேவி(35). இவர்கள், பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி, சிப்பாய் நகரில் வசித்து வருகின்றனர்.

தீபாவளியை கொண்டாடுவதற்காக கணவன்-மனைவி இருவரும் நேற்று மொபட்டில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தனர்.

சாலையில் இருந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் ராமதாஸ் ஓட்டிச்சென்ற மொபட் பள்ளத்தில் இறங்கியது. அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மொபட் மீது மோதியது.

இதில் கணவன்-மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த தேவி மீது கன்டெய்னர் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய தேவி, கணவர் கண் எதிரேயே உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

ராமதாஸ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com