சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோத செயல் களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை
Published on

தூத்துக்குடி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை சந்தித்து அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது, அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசும் போது, கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், அது பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்தார். அனைவருக்கும் முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி அனுப்பி வைத்தார்.

ஆய்வின் போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர காமராஜ், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

தேவையில்லாமல் ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் சுமார் 3400 வாகனங்கள் வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. 190 வாகனங்கள் மட்டுமே ஒப்படைக்க வேண்டியுள்ளது.

மாவட்டத்தில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் சுமார் 26 இடங்களில் வாகன சோதனை நடந்து வருகிறது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com