

விருதுநகர்,
ஆதார் அட்டை கிடைக்காதவர்களும் தொலைத்தவர்களும் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தினை அணுகலாம் என்று கலெக்டர் சிவஞானம் கூறியுள்ளார்.
ஆதார் அட்டை
கலெக்டர் சிவஞானம்
விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
ஆதார் அட்டைக்கு பதிவு செய்து ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் தங்களது ஆதார் எண்ணை தெரிந்து கொள்ள ஏதுவாக ஆதார் உதவிமையங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இவை அடுத்தமாதம்(பிப்ரவரி) 28-ந் தேதி வரை செயல்படும். இந்த ஆதார் உதவி மையங்களில் ஆதார் எண்ணிற்கு ஏற்கனவே பதிவு செய்து விட்டு ஆதார் எண், ஆதார் அட்டை கிடைக்கப்பெறாத பொதுமக்கள் மற்றம் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியிடு எண், கை விரல் ரேகை மற்றும் கருவிழிகளைப் பதிவு செய்து, சில வினாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.
இ-சேவை மையம்
மேற்கூறிய வழிமுறையில் கிடைத்த ஆதார் எண்ணை ஆதார் உதவி மையங்களின் அருகாமையிலேயே இயங்கும் அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து விரல்ரேகை மற்றும் கருவிழியினைப் பதிவு செய்து ரூ.30-மட்டும் கட்டணம் செலுத்தி கைக்கு அடக்கமான பிளாஸ்டிக் ஆதார் அட்டையாகவோ அல்லது ரூ.10-மட்டும் செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக் கொள்ளலாம். எனவே ஆதார் எண்ணிற்கு ஒரு முறை பதிவு செய்தவர்கள் மீண்டும் மீண்டும் நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு செல்லத் தேவையில்லை. இந்த உதவி மையங்களை அணுகலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.