

கோவில்பட்டி,
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி விழிப்புணர்வு பிரசாரம் கோவில்பட்டியில் நேற்று நடந்தது.
வெளிநாட்டு குளிர்பானங்களினால் உடல்நலனுக்கு தீங்கு ஏற்படுகிறது. உள்நாட்டு குளிர்பானங்கள் முற்றிலும் அழிந்து, லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து உள்ளனர். வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால், விவசாயம் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது.
எனவே வருகிற 1ந் தேதியில்(புதன்கிழமை) இருந்து வெளிநாட்டு குளிர்பானங்களை தமிழகத்தில் விற்பனை செய்வது இல்லை என்று வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்த விழிப்புணர்வு பிரசார கூட்டம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் நடந்தது. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சேதுரத்தினம், நகரசபை தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துராஜ், செயலாளர் நீதிராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கங்கைகொண்டானில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். அந்த நிறுவனங்கள் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் குடிநீர் உறிஞ்ச அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை பயன்படுத்த மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். பின்னர் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.