மூதாட்டி கொலையில் பானிபூரி வியாபாரி கைது

ராமநகர் அருகே நடந்த மூதாட்டி கொலையில் பானிபூரி வியாபாரி கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
மூதாட்டி கொலையில் பானிபூரி வியாபாரி கைது
Published on

ராமநகர்:

மூதாட்டி கொலை

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா தோபினகெரே கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம்மா (வயது 65). இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜெயம்மா தனது வீட்டின் பின்பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஜெயம்மாவை அரிவாளால் வெட்டினார்.

இதனை தடுக்க முயன்ற ஜெயம்மாவின் மகன் சித்தராஜையும் மர்மநபர் அரிவாளால் வெட்டி இருந்தார். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த ஜெயம்மா பரிதாபமாக இறந்தார். அவர் அணிந்திருந்த தங்கநகைகளை அந்த மர்மநபர் கொள்ளையடித்தார்.

பானிபூரி வியாபாரி கைது

மர்மநபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த சித்தராஜிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து அட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜெயம்மாவை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பானிபூரி வியாபாரியான ரவி என்பவர் கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

ஜாமீனில் வெளியே.....

அதாவது ரவி கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூருவில் துரித உணவு கடையில் வேலை செய்து வந்து உள்ளார். அப்போது அந்த கடைக்கு வந்த ஒருவருக்கும், ரவிக்கும் தகராறு உண்டானது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி அந்த நபரை கொலை செய்து ஹெப்பாலில் உள்ள ஏரியில் வீசி இருந்தார். இந்த கொலை வழக்கில் அவரை பெங்களூரு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த பின்னர் தோபினகெரே கிராமத்தில் ரவி பானிபூரி வியாபாரம் செய்து வந்தார்.

ஆனால் சமீபகாலமாக அவரது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு பண கஷ்டம் ஏற்பட்டது. மேலும் பெங்களூரு கொலை வழக்கில் தனது சார்பாக ஆஜராகி வரும் வக்கீலுக்கு கொடுக்க பணம் இல்லாமல் ரவி கஷ்டப்பட்டு உள்ளார்.

நகைகள் கொள்ளை

அப்போது தான் அவர் ஜெயம்மாவின் கழுத்தில் தங்கநகைகள் கிடப்பதை பார்த்து உள்ளார். இதனால் ஜெயம்மாவை கொலை செய்து விட்டு அந்த நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய ரவி சம்பவத்தன்று ஜெயம்மாவை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது அம்பலமாகி உள்ளது.

மேலும் ரவி பெங்களூருவில் கொலை செய்து இருந்தது பற்றி அறிந்த ஜெயம்மாவை, ரவியை கொலைகாரன் என்று அக்கம்பக்கத்தினரிடம் கூறி வந்து உள்ளார். இதனால் ஜெயம்மா மீது ரவி ஆத்திரத்தில் இருந்து வந்து உள்ளார். இந்த காரணத்திற்காகவும் கொலை நடந்ததும் அம்பலமாகி உள்ளது. கைதான ரவி மீது அட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com