

திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலையில் மும்பையில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்த நிலையில் ரெயில் என்ஜினில் பெண் மயில் ஒன்று இறந்த நிலையில் சிக்கியிருப்பதை ரெயில்வே போலீசார் பார்த்தனர்.
இதையடுத்து மயிலின் உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார், திண்டுக்கல் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், திண்டுக்கல் வழித்தடத்திலோ அல்லது பிற மாவட்ட வழித்தடத்திலோ இந்த மயில் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம். மேலும் அடிபட்ட வேகத்தில் அதன் உடல் ரெயில் என்ஜினில் சிக்கியதால் தண்டவாள பகுதியில் விழாமல் இருந்துள்ளது என்றனர்.