முக்கூடலில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட பீடித்தொழிலாளர் நல ஆஸ்பத்திரி- அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்

முக்கூடலில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட பீடித்தொழிலாளர் நல ஆஸ்பத்திரியை, அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.
முக்கூடலில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட பீடித்தொழிலாளர் நல ஆஸ்பத்திரி- அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்
Published on

முக்கூடல், மே:

முக்கூடலில் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள பீடித்தொழிலாளர் நல ஆஸ்பத்திரியை, அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பார்வையிட்டார்.

பீடித்தொழிலாளர் நல ஆஸ்பத்திரி

நெல்லை மாவட்டம் முக்கூடலில் அமைந்துள்ள பீடித்தொழிலாளர் நல ஆஸ்பத்திரி, மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பீடித்தொழிலாளர்களுக்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. பீடித்தொழில் முற்றிலுமாக நலிந்து விட்ட நிலையில் பீடித்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டதால் இந்த ஆஸ்பத்திரியை கொரோனா சிறப்பு சிகிச்ச மையமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முறையான அனுமதி பெற்றது. அதனை தொடர்ந்து இங்கு மொத்தம் 175 படுக்கைகளுடன், கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஸ்பத்திரியில், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களும், நீராவி பிடிக்கும் எந்திரங்களும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவையான அளவுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளை நெல்லை மாவட்டத்துக்கான தமிழக அரசின் கொரோனா சிறப்பு பிரதிநிதியும், தமிழக தொழில் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதிக் தயாளன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், டாக்டர் அஷ்ரப்அலி மற்றும் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த சிறப்பு மருத்துவமனை செயல்படத் தொடங்கும். மேலும் நோயாளிகளுக்கு யோகா பயிற்சி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் செயல்பட உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை கொரோனா வார்டாக மாற்றியது போல் இன்னும் பல ஊர்களில் இதுபோல் கொரோனா வார்டு அமைப் பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சரிடம் பொதுமக்கள் கூறுகையில், இந்த ஆஸ்பத்திரியை தமிழக அரசு கட்டுப்பாட்டில் எடுத்து நன்றாக செயல்படுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com