

மைசூரு,
மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதால் அந்த மாவட்ட மக்களிடம் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா சார்பில் நேற்று விவசாய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் செய்யப்பட்டு உள்ள வளர்ச்சித் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. அந்த திட்டங்களை செயல்படுத்த முதல்மந்திரி சித்தராமையா கமிஷன் பெற்றுள்ளார். இதற்காக அவர் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குறிப்பாக மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய இரு மாவட்ட மக்களிடமும் சித்தராமையா மன்னிப்பு கோர வேண்டும்.
கர்நாடகத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனில் ரூ.50 ஆயிரத்தை தள்ளுபடி செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 3 மாதங்கள் ஆகியும் இன்னும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. இதன் மூலம் கர்நாடக அரசின் கஜானா காலியாக இருப்பது தெரிகிறது. கர்நாடகத்தில் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருப்பதாக சித்தராமையா கூறினால், அதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கர்நாடக மக்களுக்கு சித்தராமையா ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் வருவதால் இந்த வாக்குறுதிகள் மூலம் மக்களை திசைதிருப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். 12 முறை சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த சித்தராமையா, கர்நாடக அரசின் உண்மையான நிதிநிலையை தெரிவிக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் முன்னாள் துணை முதல்மந்திரி ஆர்.அசோக், பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா, எம்.எல்.ஏ.க்கள் சி.டி.ரவி, கோவிந்த கார்ஜோள், எம்.பி.க்கள் ஷோபா, பிரதாப் சிம்ஹா, ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பா.ஜனதா விவசாய பிரிவினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.